காரை.மண்ணின் புதல்வியும், காரை.இந்துவின் மகிமைமிக்க பழைய மாணவியும், முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் அமரர் தியாகராசா மகேஸ்வரன் அவர்களின் துணைவியாரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் 21-12-2018 அன்று ஜனாதிபதி முன்னிலையில் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்து காரை.இந்து அன்னை பெருமிதம்கொள்வதுடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக்கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக முன்பு பதவி வகித்த திருமதி விஜயகலா அவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த கரிசனைகொண்டு இக்கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்களிற்கு வழங்கிய உதவிகளை இத்தருணத்தில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நன்றியுடன் நினைவுகூருகின்றது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின்; உதவியுடன் கொள்முதல் செய்யப்பட்டு பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த ஏழு பரப்புக் காணி திடீரென ஸ்ரீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டில் கொண்டவரப்பட்டமை குறித்து பாடசாலைச் சமூகம் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருந்தது. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் தாய்ச் சங்கமும் இணைந்து முன்வைத்திருந்த கோரிக்கையின் அடிப்படையில் இக்காணியை கடற்படையினரிடமிருந்து விடுவிப்பதற்கு திருமதி விஜயகலாவினால் தீவிரதொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
தமது துணைவர் அமரர் மகேஸ்வரன் அவர்களுடைய வழியில் தமது அரசியல் பணியினை சிறப்பாக தமிழ் மக்களுக்கான பணியினை மேன்மேலும் ஆற்றும் வகையில் திருமதி விஜயகலா அவர்கள் ஆரோக்கியமும் வலுவும் பெற்று விளங்க இறைவன் அருள்பாலிக்க வேண்டும்; என பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பிரார்த்திப்பதுடன் காரை.இந்துவின் வளர்ச்சிக்கு சாத்தியமான உதவிகளை தொடர்ந்து வழங்குவார் என நம்புகின்றது.
No Responses to “கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள காரை.இந்துவின் மகிமை மிக்க பழைய மாணவி திருமதி விஐயகலா மகேஸ்வரனை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.”