சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் பணிகளை நடப்பாண்டில் முன்னெடுக்கும்பொருட்டு அமைந்துள்ள புதிய செயற்பாட்டுக் குழுவினை வரவேற்றுக்கொண்டு வாழ்த்துவதில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பேருவகையடைகின்றது. கடந்த காலங்களைப்போலவே எமது சங்கத்துடனான நேச உறவுத் தொடர்பினை புதிய செயற்பாட்டுக் குழுவும் தொடர்ந்து பேணிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனலாம்.
சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் முன்னைய செயற்பாட்டுக் குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்டு தொடருகின்ற பல முன்னுதாரணமான காரை.மண்ணிற்கான பயன்மிக்க வேலைத் திட்டங்கள் விதந்து போற்றுதற்குரியனவாகும். சிறப்பாக மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுக் குழுவினை உருவாக்கி அதனூடாக காரைநகர்ப் பாடசாலைகளில் பயிலும்மா ணவர்களின் பலதரப்பட்ட திறன்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையிலான போட்டிகளை அமைத்து பரிசில்கள் வழங்கி வருவதும், மண்ணின் சான்றோர்களும் கலைஞர்களும் சேவையாளர்களும் வாழும்பொழுதே பாராட்டி மதிப்பளிக்கப்படல்வேண்டும் என்ற சிந்தனையை செயலாற்றி வருவதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும்.
எமது கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரும் காரைநகர்க் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த அயராது உழைத்துவருமான அமரர் கலாநிதி தியாகராசா அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட வேலைத் திட்டத்திற்கான தொனிப்பொருளாக ‘தியாகத் திறன் வேள்வி’ என்ற பொருத்தமான பெயரினை தெரிவுசெய்த இச்சபையின் செயலைப் பாராட்டி நன்றி கூறுகின்றோம். அதேவேளை மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினைத் தோற்றுவித்து அதன் முதுகெலும்பாகவிருந்து அர்ப்பணிப்போடு உழைத்து வந்த எமது கல்லூரியின் பழைய மாணவனாகிய அமரர் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் அளப்பரிய பணிகளையும் இத்தருணத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
காரைநகர் கல்விப் பாரம்பரியத்திற்கு அடித்தளமிட்டு ஒப்பற்ற கல்விப் பணியாற்றி வருகின்ற காரைநகரின் முதன்மைப் பாடசாலையாக விளங்கும் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை கொண்டுள்ள அக்கறையினையும் கல்லூரியின் பல தேவைகளை நிறைவேற்றிவைக்க உதவியதையும் அனைவரும் நன்கறிவர். புதிய செயற்பாட்டுக்குழுவும் இப்பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
காரை மண்ணிற்கான விரிவான பல வேலைத் திட்டங்களை வகுத்து இன்னும் சிறப்பாகப் பணியாற்றி காரைநகரின் அபிவிருத்திப் பாதையில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபை தொடர்ந்து வரலாற்றுத் தடங்களைப் பதிக்கும் வகையில் புதிய செயற்பாட்டுக் குழுவும் உழைக்கும் என்கின்ற நம்பிக்கையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
No Responses to “சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் புதிய செயற்பாட்டுக் குழுவை காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது”