அந்நியர் ஆட்சிக் காலத்தில் சைவத்தமிழ்க் கலாசாரம் பின்பற்றப்படுவது மறுக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்துப் போராடி சைவசமய விழிப்புணர்வினை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் அயராது உழைத்தவர் நாவலர் பெருமானுக்கு அடுத்து வைத்துப் போற்றப்பட்டவரான காரை.மண் தந்த மகான் அருணாசல உபாத்தியாயர். சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்று காரை.மண்ணில் நிறுவப்படவேண்டும் என்ற அருணாசல உபாத்தியாயரது சிந்தனையின் வெளிப்பாடாக இவர் வேண்டிக்கொண்டதற்கிணங்க சைவப் பெரியாரான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களால் இற்றைக்கு 135 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டு காரைநகர் இந்துக் கல்லூரி என அழைக்கப்படும் ஒப்பற்ற கல்வி நிறுவனம் விழுதுகள் பல பரப்பி பெரு விருட்சமாக உயர்ந்து நின்று தளராது கல்விப் பணியாற்றி வருகின்றது. வெள்ளி விழா அதிபர் என்ற பெருமைக்குரிய கலாநிதி ஆ.தியாகராசா உள்ளிட்ட பல அதிபர்களினதும் ஆசிரியப் பெருந்தகைகளினதும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் புகழ்பூத்த பாடசாலைகளுள் ஒன்றாக இன்று விளங்கி வருகின்றது. காரை.இந்து அன்னையின் அரவணைப்பிலே வளர்ந்து நன்னிலையடைந்த பழைய மாணவர்களது உதவியும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அந்த வகையிலேயே கொழும்பு வாழ் காரை.இந்து அன்னையின் புதல்வர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் வளர்ச்சியை முன்நகர்த்திச் செல்ல பல்வேறு உதவிகளை வழங்கி வருவது மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்றது முதல் கொழும்புக் கிளையுடன் தொடர்பினைப் பேணி வருகின்றது. இச்சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.க.ஜெகதீசன் செயலாளர் அமரர் தி.மார்க்கண்டு ஆகியோர் இச்சங்கத்துடன் தொடர்பிலிருந்து வந்ததை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றோம். தற்போதய தலைவரான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரன் அவர்களும் ஏனைய முக்கிய நிர்வாகிகளும் எம்முடன் நெருக்கமான தொடர்பினைப் கொண்டுள்ளமை எதிர்காலத்தில் கல்லூரியின் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வழிசமைக்கும் என நம்புகின்றோம்.
நேசேந்திரன் அவர்களது தலைமையிலான நிர்வாகம் 25வது ஆண்டு நிறைவினை கொண்டாடி காரை.இந்து அன்னையை பெருமைப்படுத்த முன்வந்த செயலைப் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டுவதுடன் சனிக்கிழமை நடைபெறவுள்ள இச்சங்கத்தினது வெள்ளி விழா சிறப்புற்று விளங்க வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வெள்ளி விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வாழ்த்துகிறது.”