தமிழ், சமயம், சமூகம், அரசியல் என பல தளங்களிலும் அருந்தொண்டாற்றி நாடறிந்த பன்முகப் பணியாளரும், காரை.இந்துவின் மூத்த பழைய மாணவனும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தொடர்பு மிக்க ஆயுட்கால உறுப்பினருமாகிய(Associate Member – London) திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் இவ்விணையத்தளத்தின் 7வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துரை:
.பல சவால்களையும், தடைகளையும் தாண்டி இற்றைக்கு ஏழு ஆண்டுகளிற்கு முன்னர் தோற்றம் பெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பிரமிக்கத்தக்க அபரிதமான வளர்ச்சியும், அளவிடற்கரிய உயர்ந்த வரலாற்றுப் பணிகளும் கண்டு, இந்துவின் பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பெருமையடைகின்றனர்.
ஓர் அமைப்பின் வளர்ச்சிக்கு இணையத்தளம் சிறந்த பிரச்சாரக் கருவியாக அமையக்கூடியது. அந்தவகையில் ஏழு ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட karaihinducanada.com இணையத்தளமானது பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை துரிதமான வளர்ச்சியைப் பெறுவதற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி வாழ்த்துவதற்குக் கிடைத்த வாய்ப்பிற்கு மகிழ்வடைகின்றேன். காரைநகர் இந்துக் கல்லூரி என்ற பெரு விருட்சத்தின் விழுதுகளாக உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து, இந்து அன்னையின் அருமை பெருமைகளை அறியத் தருகின்ற அளப்பரிய பணி விதந்து போற்றுதற்குரியதாகும். கல்லூரியின் நிகழ்வுகளையும், சாதனைகளையும், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் தொடர்புபட்ட பல்வேறு விடயங்களையும் இவ்விணையத்தளம் ஊடாகப் பார்வையிட்டு மகிழ்ச்சியடைகின்றனர். இவ்விணையத்தளத்தில் பதிவிடப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் வாசகர்களின் ஆர்வத்தினை தூண்டும்படி, தெளிவாகவும், விளக்கமாகவும் அழகியமுறையில் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற முன்னுதாரணமான பணி போற்றுதற்குரியதாகும். பழைய மாணவர் சங்கங்களின் வேறு எந்த இணையத்தளமாவது இதுபோன்று சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படுவதாக நான் பார்த்ததில்லை. ஆறு ஆண்டுகளாக இந்த இணையத்தளத்தினை சிறப்பாக நிர்வகித்து அதன் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்ட திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் அனைவரதும் பாராட்டிற்குரியவராகும்.
132ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமைக்குரிய கல்லூரியின் வரலாற்றினை எதிர்கால இளம் சமுதாயமும் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தின் பணிகள் அமைந்து மேன்மேலும் சிறக்கவும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒன்றுபட்ட ஒற்றுமையான உழைப்பின் ஊடாக கல்லூரி அன்னை மேலும் உயர்ச்சிபெற்று விளங்கவும் இறைவனைப் பிரார்த்தித்து மனதார வாழ்த்துகின்றேன்.
அன்புடன்
ஐ.தி.சம்பந்தன்.
பழைய மாணவன்.
No Responses to “karaihinducanada.com இணையத்தள சேவையின் ஏழு ஆண்டுகள் நிறைவு குறித்து காரை.இந்துவின் மூத்த பழைய மாணவன் ஐ.தி.சம்பந்தன் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை.”