logo

OSA History

கனடா பழைய மானவர்சங்கத்தின் தோற்றம்:2012-12-09

கல்லூரியின் வரலாற்றுப்பக்கங்களில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் தோற்றம் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினை நிறுவுவதற்கான ஆரம்ப பொதுக் கூட்டம் சென்ற செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு 5321 Finch Avenue East என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீசத்திய சாயி பாபா நிலையத்தில் பெருந்திரளான பழைய மாணவர்களின் சமூகத்தில் சிறப்புற நடைபெற்று காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்றுப் பக்கங்களில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

கல்லூரியின் முன்னாள் மாணவ முதல்வரும் முன்னாள் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியையும் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவருமாகிய திருமதி.கிருஸ்ணவேணி சோதிநாதன் வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கூட்டத்திற்கு தலைமை வகித்திருந்தார். பாடசாலையில் பயின்ற சிரேஸ்ட மாணவர்கள் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்தியிருந்த முதன்மை மிக்க மாணவர்கள் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்த சிறப்பு மிக்க சபையாக அமைந்திருந்தது மட்டுமல்லாது கனடாவில் இதுபோன்ற பொதுக்கூட்டங்களிற்கு இவ்வளவு தொகையான மக்கள் கூடியிருப்பதை இன்று தான் முதற்தடவையாக பார்ப்பதாக பலரும் அக்கூட்டத்தில் தெரிவித்திருந்தமை கூட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்துவனவாகவிருந்தன என்றே கூறலாம்.

1946ஆம் ஆண்டு முதல் கல்வி பயின்ற அதிசிரேஷ்ட பழைய மாணவனாக விளங்குகின்ற திரு.கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் சிரேஷ்ட மாணவர்களாகிய திரு.வேலுப்பிள்ளை கந்தையா திரு.அருணாசலம் செல்வரத்தினம் திரு.பொன்னையா தியாகராசா திரு.முருகேசு சின்னத்துரை திருமதி.கௌரியம்மா தாமோதர ஜயர் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்து வரலாற்று முக்கியத்துவம் மிக்க இக்கூட்ட நிகழ்வுகளை மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருந்தனர். கடவுள் வணக்கம் அக வணக்கம் ஆகியனவற்றை அடுத்து கல்லூரியின் பழைய மாணவராகிய அமரர் சங்கீதபூசணம் காரை.ஆ.புண்ணியமூர்த்தி அவர்களினால் பக்கவாத்திய சகிதம் மிக இனிமையாக இசைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்த கல்லூரிப் பண் இறுவட்டுமூலமாக இசைக்கப்பட்டபோதும் அச்சமயத்தில் கூட்டத்தினர் அனைவரும் எழந்துநின்று காரை இந்து அன்னைக்கு மரியாதை செய்தபோதும் உணர்வுபூர்வமான சூழல் நிலவியதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரபல கணித ஆசிரியரும் கனடா வாழ் காரைநகர் மக்களின் ;நன்மதிப்புக்குரியவருமாகிய திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்கள் கல்லூரியின் அதிபர் திரு.பொன்.சிவானந்தராசா தாய்ச் சங்கத்தின் போசகர் திரு.கந்தையா சதாசிவம் ஆகியோரினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகளை வாசித்தார்.

திருமதி.கிருஸ்ணவேணி சோதிநாதன் தனது தலைமை உரையினை சுருக்கமாக அதேவேளையில் சொல்லவேண்டியனவற்றை மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் தெரிவித்து நிகழ்த்தியிருந்தமை அனைவரதும் பாராட்டுக்குரியதாகவிருந்தது. தலைமையுரையை அடுத்து இடைக்கால நிர்வாக சபையின் இணைப்பாளராக பணிபுரிந்த திரு.கனக.சிவகுமாரன் அவர்களினால் இடைக்கால நிர்வாக சபை தாய்ச் சங்கத்தினால் நியமிக்கப்பட்டது முதல் அச்சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளை விரிவாக உள்ளடக்கிய அறிக்கையினை சமர்ப்பித்திருந்தார். அங்கத்தவர்களின் கருத்துரைகளிற்கான நேரம் அறிவிக்கப்பட்டபோது பலஅ ங்கத்தவர்களும் முன்வந்து தமது கல்லூரிக்காலத்தின் பசுமையானதும் இனிமையானதுமான நினைவுகளை மீட்டு பகிர்ந்து கொண்டதுடன் தமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்லூரி அன்னையின் அரவணைப்பு காரணமாகவிருந்ததையும் குறிப்பிட்டதுடன் கல்லூரியில் பணியாற்றிய அதிபர்களதும் ஆசிரியர்களதும் ஒப்பற்ற அர்ப்பணிப்பான சேவையினை பாராட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்திருந்தமை உள்ளத்தை நெகிழவைப்பதாக அமைந்திருந்ததுடன் கனடாவில் அமைகின்ற பழைய மாணவர் சங்கத்தினூடாக காரை இந்து அன்னைக்கு நன்றிக்கடனை செலுத்தக் கிடைத்த வாய்ப்பிற்கு தமது மனநிறைவினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்திருந்தனர்.

பிரபல முன்னாள் ஆசிரியரும் கல்விவள ஆலோசகராக பணிபுரிந்தவருமாகிய திரு.தம்பையா அம்பிகைபாகன் கனடா சைவ சிந்தாந்த மன்ற தலைவர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.நடராசா அமிர்தலிங்கம் முன்னாள் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு.அருணாசலம் செல்வரத்தினம் முன்னாள் துறைமுக அதிகார சபை அதிகாரியும் கனடா-காரை கலாச்சாரமன்றத்pன் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினருமான திரு.கந்தப்பு அம்பலவாணர் முன்னாள் பிரதி நில அளவையாளர் நாயகமும் இடைக்கால நிர்வாக சபையில் உறுப்பினராக அங்கம் வகித்து முனைப்போடு செயலாற்றி இலக்கினை அடைவதற்கு உறுதுணையாகவிருந்த திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை மூளாய் கிராமத்திலிருந்து கல்லூரியில் பயின்று பல்கலைக்கழகம் சென்ற திருமதி. யசோதை ஸ்ரீதரன் ஆகியோர் கருத்துரை வழங்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இடைக்கால நிhவாக சபையினால் தயாரிக்கப்பட்ட யாப்பு யாப்பினை தயாரிப்பதற்கு முக்கிய பங்குவகித்த திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இவ்யாப்பானது அவசரத்தில் தயாரிக்கப்பட்டதொன்றெனவும் ஆனாலும் அமையப்போகும் பழைய மாணவர் சங்கம் இவ்யாப்பினை பின்பற்றி ; உரியமுறையில் செயலாற்றக்கூடியவாறு தாய்ச் சங்க யாப்பின் அடிப்படையில் முக்கியமான அனைத்து விதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் பழைய மாணவர் சங்கத்தினை உடனடியாக பதிவு செய்வதற்கு வசதியாக யாப்பினை அங்கீகரிக்குமாறு கேட்டதுடன் அங்கத்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பின் அவற்றினை தெளிவாக எழுதி அமையப்போகும் நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தால் நிர்வாகம் அவற்றினை பரிசீலித்து அவசியமானால் நடைமுறைப்படுத்த முயற்சிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

இதனை பொதுச் சபை ஏற்றுக்கொண்டு யாப்பினை திருத்தங்களின்றி அங்கீகரித்தது. கூட்டத்தின் முக்கிய நிகழ்வாகிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நேரம் வந்த பொழுது நிர்வாகசபையிலுள்ள பதவிகளிற்கு போட்டியிட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதையும் குறிக்கப்பட்ட முடிவு திகதிக்கு முன்பாக குறிக்கப்பட்ட பதவிகளிற்கு விண்ணப்பித்தோர் பெயர்கள் அவர்களை பிரேரித்து அனுமதித்தோர் பெயர்கள் ஆகிய வபிரங்கள் அச்சிடப்பட்டு கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த அனைத்து உறுப்பினர்களிற்கும் வழங்கப்பட்டிருப்பதையும் தலைவரினால் தெரியப்படுத்தப்பட்டதுடன் தலைவர் உப-தலைவர் செயலாளர் உதவிச் செயலாளர் பொருளாளர் உதவிப் பொருளாளர் ஆகிய பதவிகளிற்கு ஒவ்வொருவர் வீதம் விண்ணப்பித்திருப்பதால் இப்பதவிகளிற்கு விண்ணப்பித்தோர் ஏகமனதாக தெரிவானதாக அறிவிக்கப்பட்டது.ஜந்து நிர்வாக உறுப்பினர்கள் பதவிகளிற்கு ஆறுபேர் விண்ணப்பித்திருந்தனராயினும் திரு.;கனகரத்தினம் சிவபாதசுந்தரம் கூட்டத்திற்கு சமூகமளிக்கமுடியாத நிலையில் ஏனைய ஜவரும் ஏகமனதாக தெரிவானதாக தலைவர் அறிவித்தார். தெரிவான நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம் வருமாறு: தலைவர்: திரு.சின்னத்தம்பி தம்பிராசா உப-தலைவர்: திரு.தம்பையா அம்பிகைபாகன் செயலாளர்: திரு.கனக.சிவகுமாரன் உதவிச் செயலாளர்: திருமதி.ஸ்ரீலதா மனோராகவன். பொருளாளர்: திரு.ஆறுமுகம் சோதிநாதன். உதவிப் பொருளாளர்: நடராசா பிரகலாதீஸ்வரன் நிர்வாக உறுப்பினர்கள்: திருமதி.செல்வ இந்திராணி சித்திரவடிவேல் திரு.ராசரத்தினம் சத்தியசீலன் திரு.மாணிக்கம் கனகசபாபதி திரு.நாகராசா பாலசுப்பிரமணியம் திரு.கனகேந்திரம் உமைபாகன்; போசகராக திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களும் கணக்காய்வாளராக திரு.கந்தப்பு அம்பலவாணர் அவர்களும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். தெரிவுகளைத் தொடர்ந்து கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபரான திரு.சி.தம்பிராசா தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு உறுப்பினர்களிற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார.

திரு.தம்பிராசா தமது உரையில் காரை இந்துவில் நீண்ட காலம் பணியாற்றிய பல ஆசிரிய மணிகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களின் கல்விப் பணியினால் பல பழைய மாணவர்கள் உன்னதமான நிலையிலிருந்து தமக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்து வருவதாக குறிப்பிட்டதுடன் இன்று அமைக்கப்பட்டுள்ள பழைய மாணவர் சங்கமானது உனக்கு நீயே உண்மையாய் இரு என்கின்ற கல்லூரியின் மகுட வாசகத்திற்கு ஏற்ப ஒழுகி கல்லூரியின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் என்பதுடன் இதற்கு இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்திப்பதாக கூறி தனது உரையினை நிறைவு செய்தார். செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் ஆரம்ப பொதுக்கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்த ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றியதைத் தொடர்ந்து காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் முக்கியமான பதிவினை ஏற்படுத்திய கூட்டம் இனிதே நிறைவுற்றது.


Comments are closed.